'அனைத்துக் கட்சிகளைக் கூட்டி மத்திய அரசுக்கு முதல்வர் அழுத்தம் தரவேண்டும்'
சென்னை: இந்தித் திணிப்பையும் மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு அறிமுகம் செய்யப்படுவதையும் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அக்கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சென்னை சைதாப்பேட்டையில் நடந்த ஆர்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டார்.
தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், செயற்குழு உறுப்பினர்கள் க.பீம்ராவ், ம.சித்திரகலா, சைதாப்பேட்டை பகுதிச் செயலாளர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், "பலமொழி பேசும் நாட்டில், இந்தியைத் திணிக்கும் வேலையைசெய்கின்றனர். நாடாளுமன்ற, பொதுத்துறை, அரசு நடவடிக்கைகள் இனி இந்தியில்தான் இருக்கும் என்ற நிலையை உருவாக்கி வருகின்றனர். 43 விழுக்காட்டு மக்கள் இந்தி பேசுவதால் இதை செய்வதாக மத்திய அரசு கூறுகிறது.
இந்தி திணிப்பு, நுழைவுத் தேர்வை எதிர்த்து முதல்வர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். இளையராஜா சிறந்த இசைஞானி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அம்பேத்கருடன் பிரதமர் நரேந்திர மோடியை அவர் ஒப்பீடு செய்தது எந்தவிதத்திலும் பொருத்தமற்றது. நேர்மையற்றது, நியாயமற்றது.
"இதில் ஏதோ ஓர் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது," என்று கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
சென்னை அண்ணா சாலையில் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டார்.
அவர் கூறும்போது, "இந்தி பேசாத மாநிலங்களில் தொடர்பு மொழியாக ஆங்கிலம்தான் இருக்க வேண்டும். இந்தியை ஏற்க முடியாது என்று 1968ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
"மத்திய அரசின் ஆட்சிமொழி சட்டமும் இதை ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கையைத்தான் அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. இந்தித் திணிப்பை கைவிட வேண்டும்," என்றார்.

