உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரைத் திருவிழா கடந்த 5ஆம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் திருநங்கைகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவின் 16-வது நாள் நிகழ்ச்சியாக நேற்று (புதன்கிழமை) அதிகாலை கோவிலில் உள்ள அரவாண் சிரசுக்கு முதல் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பிறகு தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கூவாகம் தேர்த்திருவிழாவின்போது தேரோட்டத்தைக் காண அந்தப் பகுதியில் உள்ள ஒரு பழைய வீட்டின் மேல்மாடத்தில் ஏராளமானோர் ஏறி நின்று தேரோட்டத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். வீட்டின் அருகே தேர் வந்தபோது திடீரென பால்கனி இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். உடனே பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காவல்துறை அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி ஏராளமானோர் அந்த மேல்மாடத்தில் ஏறி நின்றதால் பாரம் தாங்காமல் அது இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.
நல்லவேளையாக இந்த விபத்தில் சிக்கியவர்கள் காயத்துடன் உயிர் தப்பினர்.

