சென்னை: தமிழகத்தில் கொவிட்-19 தொற்றுக்குச் சிகிச்சை பெறுவோர் மருத்துவமனைகளில் இல்லை என்ற போதிலும் மருந்துகள், மருத்துவச் சாதனங்கள் போன்றவற்றை எப்போதும் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். தமிழகத்தின் 38 மாவட்டங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் புதிய தொற்று இல்லாவிட்டாலும் 8 மாவட்டங்களில் மீண்டும் கொவிட்-19 தொற்று அதிகரிக்கும் அறிகுறிகள் உள்ளன என்று தமிழ் நாடு சுகாதாரத்துறை மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது. புதிய வகை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தொடர்ந்து பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். கிருமிப்பரவலைத் தடுப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்தத்துறை வலியுறுத்தியது.
சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் தமிழகத்தில் கொவிட்-19 தொடர்பான கவலை வேண்டியதில்லை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். என்றாலும் கவனமுடன் இருக்க வேண்டியது நமது கடமை. ஆகையால் பொதுமக்களைக் கண்காணித்து கிருமிப் பரவலை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

