ராமேசுவரம்: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளியல் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்கள், குழந்தைகளுடன் கடல் வழியாக பிளாஸ்டிக் படகுகளில் ஆபத்தான வகையில் பயணம் செய்து ராமேசுவரத்தின் தனுஷ்கோடி பகுதிக்கு நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளனர். அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பால் ஏழை எளிய மக்கள் வாழ வழியின்றி தவித்து வருகின்றனர்.
அவ்வாறு வந்த இலங்கை தமிழர்கள் அனைவரிடமும் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினரும் மத்திய மற்றும் மாநில உளவுப் பிரிவு காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மூன்று தமிழர்கள் இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு வந்தனர்.
இலங்கை மட்டக்களப்பு திமிலை தீவு பகுதியை சேர்ந்த மதியழகன் என்பவரின் மனைவி வர்ஷினி (வயது 37) என்ற பெண், தனது குழந்தைகளான நைனிகா(11), ரங்கிசன்(4) ஆகியோருடன் வந்துள்ளார்.
கடந்த சில நாட்களில் மட்டும் இலங்கை தமிழர்கள் நாற்பதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் தமிழகத்திற்கு வந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அவர்கள் நேற்று இரவு இலங்கையிலிருந்து பிளாஸ்டிக் படகு மூலம் புறப்பட்டு வந்துள்ளனர். அதிகாலை 5 மணி அளவில் தனுஷ்கோடிக்கு வந்து இறங்கியுள்ளனர்.
அவர்கள் மூன்று பேரும் தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் ஆதரவின்றி தவித்துக் கொண்டிருந்ததாக தகவல் கிடைத்ததும் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் மற்றும் காவல்துறையினர் அவர்களை மீட்டு வந்தனர்.
இலங்கையில் இருந்து வந்ததற்கான காரணம் குறித்து வர்ஷினியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடும் உயர்வு ஏற்பட்டு விட்டதால் அங்கு வாழ வழியில்லை.
இதனால் தமிழகத்திற்கு வந்துவிட்டதாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.

