வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடியில் பழனியம்மாள் என்பவர் காணாமல் போன தனது கணவரை கடந்த 10 நாள்களுக்கும் மேலாக ஊர் ஊராகச் சென்று தொடர்ந்து தேடி வருகிறார்.
காவல்நிலையத்தில் புகார் அளித்தும் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளதால், ஓர் ஆட்டோவைப் பிடித்து அதில் ஒலிபெருக்கிகளைக் கட்டிவிட்டு தனது கணவரை யாரேனும் பார்த்திருந்தால் தன்னிடம் கூறும்படி பிரசாரம் செய்து வருகிறார்.
அந்த ஆட்டோவின் வெளிப்புறப் பகுதிகளில் தனது கணவரின் புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டியை கட்டிவிட்டும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும் உதவி கோரி வருகிறார்.
தொடர்ந்து சரியான சாப்பா டின்றி, மனமொடிந்த நிலையில் கணவரைத் தேடி அலையும் கூலித்தொழிலாளியான பழனியம்மாளின் நிலைமை காண்போரை வேதனைக்குள்ளாக்கி வருகிறது.
வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவராமன், 45. இவர் வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களுக்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்து வந்தார். குறைந்த வருமானமே கிடைத்து வந்த நிலையிலும் மனைவி, குழந்தைகளுடன் மிகுந்த பாசத்தோடு இருந்து வந்தார். அண்மையில் இவரது உடல்நிலை சிறிது பாதிக்கப்பட்டது. இந்நிலையில், இம்மாதம் 7ஆம் தேதி தனது வீட்டிலிருந்து வாழப்பாடிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை.

