சென்னை: ரயில் தண்டவாளங்களில் நின்று செல்ஃபி எடுத்தால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும். அதேபோல், ரயில் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்தால் ரூ.500 அபராதம் அல்லது மூன்று மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்டம் எச்சரிக்கை செய்துள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் சென்னை புறநகர் ரயிலில் இருந்து விழுந்து உயிரிழந்தவர்கள், காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 200க்கும் மேல் தாண்டியுள்ளது.
இந்நிலையில், படியில் தொங்கியபடி பயணம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கு முடிவெடுத்துள்ள தெற்கு ரயில்வே நிர்வாகம், படியில் பயணம் செய்வோருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை அல்லது 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்து உள்ளது.
மேலும், தண்டவாளங்களில் நின்று செல்ஃபி எடுப்போருக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஓடும் ரயில்களில் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்பவர்கள், தண்டவாளத்தில் நின்றுகொண்டு செல்ஃபி எடுப்பவர்கள் மீது தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டலம் கடும் நடவடிக்கை எடுக்க உள்ளது.
சென்னை புறநகர் மின்சார ரயில் தண்டவாளங்களில் அத்துமீறி கடப்பவர்கள், செல்ஃபி எடுப்பவர்கள், காணொளி எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரயில் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனக் கூறியுள்ளது.