சிறையிலிருந்து தப்பிய சிறுவன்
கைது: காவலர்கள் மூவர் பணிநீக்கம்
மதுரை: குழந்தைகளைப் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டமே 'போக்சோ' சட்டம். இச்சட்டத்தின் கீழ் கைதான தேனி மாவட்டம், போடி சிறைக்காடு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனை மதுரையில் உள்ள சிறுவர் சீர்திருத்தச் சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் சென்றபோது அவர் தப்பி ஓடிவிட்டார்.
தப்பியோடிய சிறுவனைத் தேடி வந்த காவலர்கள், 15 வயது பெண்ணுக்கும் தனக்கும் பிறந்த குழந்தையைச் சிறுவன் காண வந்தபோது மீண்டும் கைது செய்தனர்.
இந்நிலையில், அலட்சியமாக இருந்து சிறுவனைத் தப்பவிட்ட காவலர்கள் செல்லப்பாண்டி, தாவீது, நீலமேக கண்ணன் ஆகியோரை காவல் ஆய்வாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார்.
2 மணி நேரத்தில் சென்னை- மதுரை
புல்லட் ரயில் என்று கூறப்படும் அதிவேக ரயில் மூலம் மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் இந்த அதிவேக ரயில் தடத்தை அமைப்பதற்கான பணிகளுக்கு ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இந்திய ரயில்வேயுடன் இணைந்து இதற்கான ரயில் தடங்களை நிறுவ மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் நடப்புக்கு வரும்போது சென்னை - மதுரைக்கு இடையிலான தூரத்தை 2 மணி நேரத்தில் கடக்கமுடியும் என்று நகர்ப்புற வளர்ச்சி வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கோப்புப் படம்: தமிழக ஊடகம்
பக்தர்களைத் துடைப்பம், முறத்தால் அடிக்கும் நூதன வழிபாடு
ஓசூர்: ஓசூர் அருகே கோயில் திருவிழாவில் பக்தர்களை துடைப்பம், முறத்தால் அடிக்கும் நூதன வழிபாடு நடைபெற்றது. தீகொத்தப்பள்ளி கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமையான தர்மராஜா ஆலய சித்திரைத் திருவிழா நடைபெற்றது.
விழாவில் தேரோட்டத்தைத் தொடர்ந்து தர்மராஜா கோயில் பூசாரி தனது இரு கைகளாலும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களை முறம், துடைப்பத்தால் அடிக்கும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது.
"துடைப்பம், முறத்தால் அடி வாங்கினால் குழந்தைப் பாக்கியம், கடன் பிரச்சினைகள் தீரும்," என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இவ்வழிபாட்டைக் காண்பதற்காக உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநில பக்தர்களும் ஏராளமானோர் திரண்டிருந்தனர்.
தஞ்சையில் முதல்முறையாக நவீன இயந்திரம் வழி உளுந்து விதைப்பு
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் முதல்முறையாக இயந்திரத்தின் மூலம் உளுந்து பயிரை விதைத்து விவசாயிகள் அசத்தி உள்ளனர். இங்குள்ள திருவையாறு சுற்று வட்டாரத்தில் இந்த ஆண்டு
66,000 ஏக்கரில் உளுந்து பயிரிடப்பட்டுள்ளது.
விலாங்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் பஞ்சாப் மாநில விவசாயிகளிடம் இருந்து இந்த இயந்திரத்தை வாங்கி வந்து உளுந்து விதைப்பைச் செய்துள்ளனர்.
விதைகள், உரங்களைக் கைகளால் தெளித்து வந்த நிலையில், இந்த நவீன இயந்திரம் தங்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என விவசாயிகள் கூறியுள்ளனர்.
இயந்திரத்தில் தெளிப்பதால் விதையின் அளவும் செலவும் குறைகிறது. விவசாயக் கருவியைப் பயன்படுத்தும்போது அதிக மகசூல் கிடைக்கும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த இயந்திரத்துக்கான ஒருநாள் வாடகை 2,400 ரூபாயாக உள்ளதால் அரசு மானிய விலையில் இதனை வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனர்.

