சென்னை: கணவனோ, மனைவியோ உயிருடன் இருக்கும்போது பணியில் உள்ள அரசு ஊழியர்கள் இரண்டாவது திருமணம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும்.
இப்படி இருதார மணம் புரியும் அரசு ஊழியர்கள் மீது குற்றவியல் வழக்குத் தொடரப்பட்டு, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்து உள்ளது.
தமிழ்நாடு அரசின் மனிதவள மேலாண்மைத் துறைச் செயலாளர் மைதிலி ராஜேந்திரன், அரசுத்துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சி யர்கள், உயர் நீதிமன்றப் பதிவாளர்கள் உள்ளிட்டோருக்கு சுற்றிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், ஒருசில அரசுப் பணி யாளர்களின் இறப்பிற்குப் பிறகே அவர்கள் இருதார மணம் புரிந்திருந்தது தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக அப்பணியாளர்களின் வாழ்க்கைத் துணைக்கு ஓய்வூதியப் பலன்களை அளிப்பதில் சிக்கல்கள் ஏற்படுவ தாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அரசுப் பணியாளர்கள் முதல் மனைவியோ அல்லது கண வரோ உயிருடன் இருக்கும் நிலையில், இரண்டாவதாக ஒருவரை மணம் புரிந்தாலோ அல்லது தவறான முறையில் தொடர்பு கொண்டிருந்தாலோ அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளுடன் குற்றவியல் வழக்குப் பதியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மைதிலி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்படி சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ள தாக அரசு தெரிவித்துள்ளது.
1973ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சட்ட விதிமுறை களின்படி, பணியிலுள்ள அரசு ஊழியர் தனது முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்யக்கூடாது என்ற வரையறை உள்ளது.
அவ்வாறு இரண்டாவது திருமணம் செய்வது ஒழுக்கக்கேடானது எனவும் அரசின் மரியாதைக்கு இச்செயல் இழுக்கு ஏற்படுத்தும் எனவும் அரசு கூறியுள்ளது.
அத்துடன், அரசு ஊழியர் இரண்டாவது திருமணம் செய்வதால் சட்டரீதியாக முதல் மனைவிக்கு கிடைக்கவேண்டிய பலன்கள் முறையாகக் கிடைப்பதில்லை எனக் குறிப்பிட்டுள்ள மாநில அரசு, முதல் மனைவி உயிரோடு இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்யும் அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையுடன் குற்றவியல் வழக்குப் பதியவும் அறிவுறுத்தி உள்ளது.

