போக்சோ சட்டத்தில் 4,023 வழக்குகள் பதிவு
சென்னை: பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் சமூக நலன், மாற்றுத்திறனாளிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் பெண்கள் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டார்.
கடந்த பத்து மாதங்களில் மட்டும் தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் 4,023 வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும் பாலியல் தொல்லைகள் குறித்து பெண்கள் உடனுக்குடன் புகார் அளிக்க முன்வர வேண்டும் என்றும் அமைச்சர் கீதா ஜீவன் வலியுறுத்தினார்.
"பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் பெண்களும் குழந்தைகளும் 1098, 14417 ஆகிய உதவி எண்களில் புகார் தர முன்வர வேண்டும். அத்தகைய புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். "அவரது அறிவிப்பு அளித்துள்ள நம்பிக்கையின் காரணமாக, உதவி எண்களுக்கு வரும் அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் நடந்த குற்றச் செயல்களுக்கு கூட தற்போது தாமாக முன்வந்து புகார் தெரிவிக்கின்றனர்," என்றார் அமைச்சர் கீதா ஜீவன்.
கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2021 மார்ச் வரை மகளிர் உதவி எண் 181க்கு வந்த மொத்த அழைப்புகள் 17,423 என்று குறிப்பிட்ட அவர், கடந்த ஓராண்டில் மட்டும் 15,046 அழைப்புகள் வந்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையங்களின் மூலம் கடந்த 2018 முதல் 2021ஆம் ஆண்டு மார்ச் வரை 13,121 பேர் பயனடைந்ததாகவும் நடப்பு திமுக அரசு பொறுப்பேற்ற இந்த ஓராண்டு காலத்தில் மட்டுமே 13,152 பேர் பயனடைந்து உள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
"கடந்த ஆண்டு மே முதல் கடந்த மார்ச் மாதம் வரை 10 மாதங்களில் போக்சோ (குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத் தடுப்பு) சட்டத்தின் கீழ் 4,023 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 36 வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இத்தகைய குற்றங்கள் தொடர்பில் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது," என்று அமைச்சர் கீதா ஜீவன் மேலும் கூறினார்.

