மு.க.ஸ்டாலின்: மீண்டும் 'உள்ளாட்சி தினம்' கொண்டாடப்படும்
சென்னை: தமிழகத்தில் மீண்டும் ஆண்டுதோறும் நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் உள்ளாட்சி தினம் கொண்டாடப்பட்டது. அதன் பின்னர் அதிமுக ஆட்சியில் அது நிறுத்தப்பட்டது. கிராமப்புற மக்களிடம் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், அரசின் அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்திடவும், மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கவும் நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும்" என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
திடீர் மின்வெட்டுக்கான காரணம் குறித்து அமைச்சர் விளக்கம்
சென்னை: கடந்த புதன்கிழமை அன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் 750 மெகாவாட் மின்சாரம் திடீரென தடைபட்டதாக விளக்கம் அளித்தார். எனினும், மின் பற்றாக்குறையைச் சமாளிக்க தமிழக மின்சார வாரியம் உற்பத்தித் திறனை உடனடியாக அதிகரித்தது என்றும் தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
நெகிழிப் பொருள் உற்பத்தியாளர்கள் மீது நடவடிக்கை: நீதிமன்றம் வலியுறுத்து
சென்னை: கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைப் பறிமுதல் செய்வதால் எந்த பயனும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியது. தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உயர் நீதிமன்றம் உறுதி செய்ததை மறுஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு, புதுவை பிளாஸ்டிக் உறுபத்தியாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தாக்கல் செய்துள்ளது. அம்மனுவை விசாரித்த நீதிபதிகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்கத் வேண்டும் என்றும் பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் கொண்டு வருவதை தடுக்காதவரை, அவற்றை கடைகளில் இருந்து பறிமுதல் செய்வதால் எந்த ஒரு பயனும் இல்லை என்றும் கருத்து தெரிவித்தனர்.
இலங்கையிலிருந்து 18 அகதிகள் வருகை
ராமேசுவரம்: இலங்கையில் நாளுக்கு நாள் அதிபருக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், அங்கிருந்து மேலும் 18 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் இருந்து மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்து சேர்ந்தனர். இதேபோல் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மேலும் ஐந்து பேர் ராமேசுவரம் அருகில் உள்ள சேராங்கோட்டை பகுதிக்கு படகு மூலம் வந்துள்ளனர்.
ஆயிரம் கிலோ குட்கா பறிமுதல்
கோவை: ராஜஸ்தானில் இருந்து புகையிலைப் பொருள்களை மொத்தமாக கடத்தி வந்து, இருப்பு வைத்து தமிழகம் முழுவதும் விற்று வந்த ரமேஷ்குமார் என்பவர் கோவை காவல்துறையினரிடம் சிக்கினார். செட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அவர் பதுக்கி வைத்திருந்த ஆயிரம் கிலோ குட்கா (போதைப்பாக்கு) பறி முதல் செய்யப்பட்டது. இதன் சந்தை மதிப்பு எட்டு லட்சம் ரூபாயாகும். மளிகை பொருள்களை இருப்பு வைப்பதாகக் கூறி, வீடு வாடகைக்கு எடுத்து அங்கு குட்காவை பதுக்கி வைத்துள்ளார். அவரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

