சென்னை: நடிகர் சூரி அளித்துள்ள புகாரின் பேரில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மீது பண மோசடி வழக்கு பதிவாகி உள்ளது.
சென்னையை அடுத்துள்ள சிறுசேரி பகுதியில் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி, விஷ்ணு விஷாலின் தந்தையும் காவல்துறை முன்னாள் டிஜிபியுமான ரமேஷ் குடவாலாவும் திரைப்படத் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் என்பவரும் தம்மை ஏமாற்றிவிட்டனர் என்பது சூரியின் புகார்.
மொத்தம் ரூ.2.70 கோடி பெற்றுக்கொண்டு தம்மை ஏமாற்றிவிட்டதாக சூரி எழுப்பியுள்ள புகாரை ரமேஷ் குடவாலா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்தப் புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி ஆறு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து சூரியிடம் இரண்டு முறை விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகள், தேவைப்பட்டால் மீண்டும் அழைப்பதாகக் கூறியுள்ளனர். மேலும், சூரி குறிப்பிட்ட சிறுசேரி பகுதிக்கும் சென்று விசாரணை மேற்கொண்டதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, சூரிக்குத் தர வேண்டிய தொகையில் ரூ.1.30 கோடி ஏற்கெனவே கொடுக்கப்பட்டுவிட்டதாகவும் மீதமுள்ள தொகை ரூ.1.40 கோடிதான் என்றும் கூறப்படுகிறது.
சூரியிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா, அன்புவேல் ராஜன் ஆகிய இருவரிடமும் விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

