சென்னை: தமிழ் நூல்களை மனனம் செய்து, கச்சிதமாக ஒப்பிக்கும் திறன் கொண்ட இரட்டைச் சகோதரிகளைப் பாராட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கி உள்ளார்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த செந்தமிழ் சாலினி, முத்தமிழ் சாமினி ஆகிய சிறுமிகளின் தமிழ் ஆர்வத்தைப் பாராட்டி இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இருவரும் திருக்குறள், தொல்காப்பியம், திருப்பாவை, திருவெம்பாவை ஆகிய நூல்களை மனனம் செய்து, பிழையின்றி ஒப்பித்து, பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளனர்.
இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இரு சிறுமிகளையும் நேரில் அழைத்துப் பாராட்டிய முதல்வர், அவர்களது தமிழ் இலக்கிய இலக்கணத் திறனை மேலும் ஊக்குவிக்கும் விதமாகவும் அவர்களது குடும்பச் சூழ்நிலையைக் கருதியும் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் தலா ஒரு லட்சம் ரூபாய் என, மொத்தம் இரண்டு லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி வாழ்த்தினார். தேனி மாவட்டம், மறவப்பட்டி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் இந்தச் சகோதரிகள் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றனர்.

