சென்னை: கொரோனா கால பொதுமுடக்கம், கட்டுப்பாடு காரணமாக மாணவர்களுக்கு கற்றல் இழப்பு ஏற்பட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதனைச் சரி செய்யவே இல்லம் தேடி கல்வி திட்டத்தை அறிவித்து, தமிழக அரசு அதை வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதாக அவர் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது குறிப்பிட்டார்.
மேலும், 'நான் முதல்வன்' என்ற புதுமையான திட்டத்தையும் தாம் தொடங்கி வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
"பள்ளி பருவம் என்பது புத்தகங்களோடு அடங்கி விடாமல், எல்லா திசைகளிலும் இருக்கக்கூடியவற்றை கற்கக்கூடியதாக அமையவேண்டும். எந்தவிதமான அழுத்தங்களும் இல்லாமல் இருக்கக்கூடிய காலக்கட்டமாக அமைய வேண்டும்.
"கற்றல் என்பது மகிழ்ச்சியோடு ஈடுபடக்கூடிய செயல்பாடாக மாறட்டும். நல்ல நோக்கமிக்கதாக ஊரும், மாநிலமும், நாடும் திகழ பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து சமத்துவ சிந்தனையை வளர்க்கும் தூதுவர்களாக மாறவேண்டும்," என்றார் முதல்வர்.

