சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் பலனாக தமிழகத்தில் மின்வெட்டு சீரடையும் என நம்புவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மின்வெட்டு ஏற்பட்டு வருவதற்கு மத்திய தொகுப்பில் இருந்து நிலக்கரி வழங்காததே காரணம் என சாடியுள்ளார்.
"மற்ற துறைகளைப் போலவே மின்சாரத் துறையிலும் மத்திய அரசு தோல்வி கண்டுள்ளது. எனினும் மத்திய அரசை நம்பியிருக்காமல் தமிழக முதல்வர் ஸ்டாலின் மின்வெட்டு ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதன் காரணமாக மின்வெட்டு இல்லாத நிலை ஏற்படும் என நம்புகிறேன்," என்றார் கே.எஸ்.அழகிரி.
இந்நிலையில், தமிழகத்தில் தடையில்லா மின் விநியோகத்தை பராமரிக்க நாளொன்றுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி வழங்குவதை மத்திய அரசு உறுதி செய்திட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஒடிசாவில் உள்ள தல்சர் சுரங்கங்களில் இருந்து போதுமான நிலக்கரி தமிழகத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கப்பட வேண்டியது மிக அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
"தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில், தற்போது நாள்தோறும் நிலக்கரி வரத்து 50 ஆயிரம் டன் அளவிற்கு மட்டுமே உள்ளது.
"தமிழகத்தில் அதிகரித்து வரும் கோடைக்கால மின் தேவையை பூர்த்தி செய்திட நிலக்கரி உற்பத்தி போதுமானதாக இருந்தாலும், ரெயில்களில் 'ரேக்கு'களின் பற்றாக்குறை காரணமாக, அது துறைமுகங்களுக்கு கொண்டு செல்லப்படுவதில்லை. இதன் விளைவாக தமிழகத்தில் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பு கவலை கொள்ளத்தக்க அளவிற்கு எட்டியுள்ளது," என முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளார்.
உள்நாட்டு நிலக்கரி பற்றாக்குறை காரணமாக, தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகம் தடையற்ற மின் விநியோகத்தை பராமரிப்பதற்காக அதிக விலை கொடுத்து நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது என்று குறிப்பிட்டுள்ள தமிழக முதல்வர், இது கொரோனா பெருந்தொற்றுக்கு பிந்தைய பொருளாதாரத்தை கணிசமாக பாதிக்கும் என்று கூறியுள்ளார்.
இந்த விஷயத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

