சென்னை: தமிழகப் பள்ளிகளில் இரு மொழிக் கொள்கை மட்டுமே பின்பற்றப்படும் என தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தி உட்பட வேறு எந்த மொழியும் தமிழகப் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இடம்பெறாது என்று பள்ளிக்கல்வித்துறை தெளிவுபடுத்தி உள்ளது.
தமிழகத்தில் அனைத்து மட்டங்களிலும் தாய்மொழியாகிய தமிழ், உலகத்திற்கான இணைப்பு மொழி ஆங்கிலம் என இருமொழிக் கொள்கை மட்டுமே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மும்மொழிக் கொள்கையைப் புகுத்துவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு சத்தமின்றி மேற்கொண்டு வருவதாக நேற்று சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனால் சமூக, மொழி ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், தமிழக பள்ளிக் கல்வித்துறை இந்தச் செய்தி அடிப்படையற்றது என்று மறுப்பு தெரிவித்தது. நீண்டகாலமாக அமலில் உள்ள இருமொழிக் கொள்கையை மாற்றியமைக்கும் திட்டம் ஏதும் இல்லை என்றும் கல்வித்துறை திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை என்ற அறிவிப்பின் மூலம் நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த முயற்சி மேற்கொண்டு வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
மூன்றாவது மொழியாக இந்தியைச் சேர்க்க வேண்டும் என்பதே மத்திய அரசின் மறைமுக நோக்கம் என சமூக ஆர்வலர்கள் சாடி வருகின்றனர்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தமிழ்மொழியைக் கட்டாயம் கற்க வேண்டும் என்ற உத்தரவு உள்ளது என்றும், கடந்த 2006ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அந்த உத்தரவில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் கூறியுள்ளார்.
தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத மாணவர்களுக்கு தமிழ் மொழியுடன் சேர்த்து அவர் தம் தாய் மொழியையும் விருப்பப்பாடமாகத் தேர்வு செய்து எழுதும் நடைமுறையும் தமிழகத்தில் பின்பற்றப்படுகிறது.
"மும்மொழிக் கொள்கை என்ற எந்த நடவடிக்கையும் அமல்படுத்தப்படவில்லை, அனுமதிக்கப்படவும் இல்லை. இருமொழிக் கொள்கைதான் அமல்படுத்தப்படுகிறது," என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அறிக்கை வழி தெளிவுபடுத்தி உள்ளார்.