மதுரை: தமிழக அரசு சின்னத்தில் இருப்பது திருவில்லிப்புத்தூர் கோவிலா அல்லது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலா என்ற சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது.
அரசு சின்னத்தில் இருப்பது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கோபுரம்தான் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழக அரசின் சின்னத்தை ஓவியர் கிருஷ்ணராவ் என்பவர் உருவாக்கி இருந்தார். அவர் மதுரை கோவிலை மையமாக வைத்தே அரசு சின்னத்தை உருவாக்கியதாக பலமுறை கூறியபோதும், சர்ச்சை முடிவுக்கு வரவில்லை.
மதுரை, திருவில்லிப்புத்தூரைச் சேர்ந்தவர்கள் அரசு சின்னத்தில் தங்கள் பகுதியில் உள்ள கோவில்தான் இடம்பெற்றுள்ளது என்று பெருமை பேசி வந்தனர்.
இந்நிலையில், வெங்கடேசன் எம்பி தமது டுவிட்டர் பதிவில், "தமிழக அரசின் சின்னம் திருவில்லிப்புத்தூர் கோபுரம் என்றே இதுவரை சொல்லப்பட்டது.
"ஆனால் அந்த சின்னத்தை வடிவமைத்த கலைஞர் கிருஷ்ணராவ் தாம் மதுரை தெற்கு கோபுரத்தை அடிப்படையாகக் கொண்டே அந்த சின்னத்தை வடிவமைத்திருப்பதாகச் சொல்லி இருக்கிறார். "அது தொடர்பாக கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது," என்று குறிப்பிட்டு அந்தக் கட்டுரையையும் படம் எடுத்து தமது பதிவில் இணைத்துள்ளார். மேலும், மதுரையின் மகுடத்தில் ஒளிகூட்டும் மற்றுமொரு கல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

