காஞ்சிபுரம்: தமிழக மக்கள் அரசிடம் முன்வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என கிராமசபைக் கூட்டத்தில் பேசியபோது முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.
சாலை வசதி, மயான பாதை வசதி, கழிவுநீர் கால்வாய், சிமெண்டு சாலைகள் அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்காடு கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பொதுமக்களுடன் உரையாடிய அவர் வளர்ச்சிப் பணிகள், குறைகளைப் பற்றி விவரங்களைக் கேட்டறிந்தார்.
பின்னர் மக்கள் மத்தியில் பேசிய அவர், மத்திய, மாநில அளவில் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டாலும் அவற்றை தேவைக்கேற்ப திறம்பட ஒருங்கிணைத்து, கடைக்கோடி மக்களிடம் சேர்ப்பதென்பது உள்ளாட்சி அமைப்புகளால்தான் முடியும் என்றார்.
"தமிழகத்தில் ஏறக்குறைய பத்தாண்டுகளாக ஒரு கட்சியின் ஆட்சி நடைபெற்றது. அந்த ஆட்சியில் முறையாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை. நாங்கள் முறையாக நடத்தி உள்ளோம். ஒவ்வொரு ஊராட்சிகளுக்கும் என்ன தேவையோ அதைச் செய்து கொடுக்கிறோம்.
"100 நாள் வேலை திட்டத்தை 150 நாள்களாக்க கோரிக்கை வைத்தீர்கள். அதை மிக வேகமாக நிறைவேற்றித்தர காத்திருக்கிறோம். மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்," என்றார் முதல்வர் ஸ்டாலின்.

