மதுரை: இன்றைய இளைஞர்களிடம் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தினால் வருங்காலத்தில் ஊழலை ஒழித்துவிடலாம் என முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கூறியுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து எந்த அரசியல் கட்சியையும் தாம் தொடங்கவில்லை என்றார்.
"அரசு நிர்வாகத்தில் நேர்மையாக இருப்பவர்கள், ஊழலை எதிர்ப்பவர்கள் செயல்பட முடியாது என்று முடிவெடுத்துதான், அரசுப் பதவியிலிருந்து விலக முடிவு செய்தேன். அது அரசியல் முடிவு என்பது சரி அல்ல. அரசியலில் நுழைய வேண்டும் என நான் விரும்பி இருந்தால் பிரபல திரை நட்சத்திரங்கள் அழைத்தபோதே நான் சென்றிருப்பேன்.
"ஆனால், ஜனநாயக முறைப்படி தேர்தல் களத்தில் போட்டியிட வேண்டும் என என்னோடு இருந்தவர்கள் ஆசைப்பட்டார்கள். அவர்களுக்காகவே தேர்தல் பிரசாரம் மேற்கொண்டேன்," என்றார் சகாயம்.
தமிழகத்தில் படித்த ஒன்பது மில்லியன் இளையர்கள் அரசு வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்து காத்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அதை தட்டிப்பறிக்கும் வகையில் வடமாநிலத்தினர் போலி சான்றிதழ் கொடுத்து, அரசு வேலையில் சேர்வதை அரசு தடுக்க வேண்டும் என்றார்.
"ஊழல் செய்பவர்களாலும், வாக்குகளைப் பெற மக்களுக்கு லஞ்சம் கொடுப்பவர்களாலும்தான் இனி அரசியலில் இருக்க முடியும். அது எங்களால் முடியாது. நாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள்," என்று சகாயம் மேலும் தெரிவித்தார்.

