சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மின்வெட்டு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், மாநிலம் முழுவதும் மின்விநியோகம் சீரடைந்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 796 மெகாவாட் மின்சாரம் வந்து சேராததே தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படக் காரணம் என்றும் அவர் டுவிட்டர் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, கோவை, விருதுநகர், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்வெட்டு அதிகரித்துள்ளதாகக் கூறி பொது மக்களும் சில தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று முன்தினம் தொடர்ந்து மூன்று மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்தடை நீடித்ததாகவும் அதன் காரணமாக கோடை வெயிலின் வெப்பத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மக்கள் தவிப்புக்கு ஆளானதாகவும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. எனினும் அப்பகுதி மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், மின்பாதையில் உள்ள சில பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு சில பராமரிப்புப் பணிகள் நடைபெற்றதால் மின்தடை ஏற்பட்டதாகத் தெரிவித்தனர்.
விருதுநகரில் அண்மைய சில தினங்களாக இரவு வேளையில் பதினைந்து நிமிடங்களுக்கு ஒருமுறை மின்வெட்டு ஏற்படுவதாகக் கூறி பர்மா காலனி பகுதியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதேபோல் திருவாரூரில் கடந்த மூன்று தினங்களாக மின்வெட்டு அதிகரித்துள்ளது என மன்னார்குடி அருகே உள்ள கிராமப்புற மக்கள் புகார் எழுப்பியுள்ளனர். நேற்று முன்தினம் திருத்துறைப்பூண்டி சாலையில் அவர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசு தமிழகத்துக்கான நிலக்கரியை வழங்காததே மின் உற்பத்தி பாதிக்கப்பட காரணம் என்றும் தமிழக அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு மாற்று வழிகளில் நிலக்கரியை அதிக விலை கொடுத்து வாங்கி நிலைமையைச் சமாளித்துள்ளது என்றும் அரசுத்தரப்பில் கூறப்படுகிறது.
மத்திய மின்தொகுப்பில் இருந்து உரிய நேரத்தில் மின்சாரம் கிடைக்காததால் மகாராஷ்டிரா, பஞ்சாப், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பல நாள்களாக இரவு நேர மின்வெட்டு அமலில் இருந்து வரும் நிலையில், தமிழகத்தில் மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் நிலைமை முற்றிலுமாக சீரடைந்துள்ளது என்றும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

