கீழடியில் ஒரே குழியில் நான்கு சுடுமண் பானைகள் கண்டெடுப்பு
சிவகங்கை: எட்டாம் கட்ட அகழாய்வின்போதும் கீழடியில் பல்வேறு அரிய பொருள்கள் கிடைத்து வருகின்றன. அந்த வகையில் நேற்று முன்தினம் கீழடியில் ஒரே குழியில் நான்கு சுடுமண் பானைகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் மற்றொரு குழியில் சுமார் 3 அடி ஆழத்தில் சிறுவர்கள், பெண்கள் விளையாடுவதற்காக பயன்படுத்தும் இரண்டு சில்லு வட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே கோவை மாவட்டம் அன்னூரில் 900 ஆண்டுகள் பழமையான மூன்று நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்திலும் ஹிஜாப்புக்குத் தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை: கர்நாடகாவைப் போல் தமிழகத்தில் ஹிஜாப்புக்கு தடைவிதிக்க வேண்டும் என வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்து முன்னேற்ற கழக தலைவரும், வழக்கறிஞருமான திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் இம்மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்ததால் ஏற்பட்ட பிரச்சினைகள் போல தமிழகத்தில் உருவாகாமல் தடுக்க, பள்ளிகள், கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மத அடையாளங்களுடன் கூடிய உடைகளை அணிய தடை விதிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பள்ளி மாணவர்களிடம் வேறுபாட்டை களையும் நோக்கில்தான் கடந்த 1960ம் ஆண்டிலேயே மாணவர்களுக்கான சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
போதை மாத்திரை விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் இருவர் கைது
சென்னை: போதை மாத்திரைகளை விற்ற கல்லூரி மாணவர்கள் இரண்டு பேரை சென்னை காவல்துறை கைது செய்துள்ளது. மதுரவாயல் பகுதியில், நேற்று முன்தினம் மாலை இருபது வயதான குகன், கிஷோர்குமார் ஆகிய இருவரும் போதை மாத்திரைகள், ஊசி மருந்துகளை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலை அடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று இருவரையும் வளைத்துப் பிடித்தனர். விசாரணையில், இரு மாணவர்களும் இணையம் வழி போதைப் பொருள்களை வரவழைத்து, உடன் படிக்கும் மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது அம்பலமானது. அவர்களிடம் இருந்து 91 போதை மாத்திரைகள், நான்கு ஊசி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மேலும் சிலர் தேடப்பட்டு வருவதாகத் தகவல்.
பொதுமக்களின் எதிர்ப்பால் கள்ளச் சாராயம் விற்ற மூவர் கைது
நாகை: கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக நாகை காவல்துறையினர் மூன்று பேரை கைது செய்தனர். அங்குள்ள இறையான்குடி, சிங்கமங்கலம் ஆகிய இரு கிராமங்களில் பொது மக்களின் ஒற்றுமை காரணமாக கள்ளச் சாராய விற்பனை நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக மீண்டும் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வந்தது. இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள் நேற்று முன்தினம் அங்குள்ள பெண்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறை உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சாராயம் விற்ற மூன்று பேரை கைது செய்துள்ளது.
தமிழகத்துக்கு அனைத்துலக நீர்ப்பாசன ஆணையத்தின் மூன்று விருதுகள்
சென்னை: உலகப் பாரம்பரிய நீர்ப்பாசன கட்டமைப்புக்கான மூன்று விருதுகளுக்கு தமிழக அரசு தேர்வு செய்யப் பட்டுள்ளதாக நீர்வளத் துறைச் செயலர் சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில், அனைத்துலக நீர்ப்பாசனம், வடிகால் ஆணையம் (ஐசிஐடி) ஒவ்வோர் ஆண்டும் உலகப் பாரம்பரிய நீர்ப்பாசனக் கட்டமைப்புகள், நீர் சேமிப்பு விருதுகளை அறிவித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். "ஒவ்வொரு நாட்டுக்கும் நான்கு விருதுகள் அந்த அமைப்பால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தியாவுக்கு அறிவிக்கப்பட்ட நான்கு விருதுகளில் தமிழகம் மூன்று விருதுகளைப் பெறுகிறது. கல்லணை, வீராணம் ஏரி, காளிங்கராயன் அணைக்கட்டு ஆகிய மூன்று கட்டமைப்புகள் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன," என்று சந்தீப் சக்சேனா தமது அறிக்கையில் மேலும் கூறியுள்ளார்.

