செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
dd560df8-92f5-438d-a518-2a3393836ca6
-

மாவட்டச் செயலாளர் பதவிக்கு

போட்டியின்றி தேர்வாகும் பழனிசாமி

சேலம்: அதிமுக அமைப்புகளின் நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான இரண்டாம் கட்டத் தேர்தல் 38 மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. சேலம், ஓமலூர் புறநகர் அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். இந்தப் பதவிக்கு வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றித் தேர்வாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

பப்ஜி மதனுக்கு எதிரான குண்டர்

சட்டம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பப்ஜி என்ற இணையத்தள விளையாட்டின் மூலம் ஆபாசமாகப் பேசி பண மோசடியில் ஈடுபட்டதாக பப்ஜி மதனையும் அவரது மனைவி கிருத்திகாவையும் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், கிருத்திகா மட்டும் பிணையில் விடுவிக்கப்பட்டார். தற்போது சிறைவாசம் அனுபவித்து வரும் மதனுக்கு எதிராக குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், அதனை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், நக்கீரன் அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது.

ஜெயக்குமாரின் பிணைக்கான நிபந்தனைகளில் தளர்வு

சென்னை: நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பிணை நிபந்தனைகளில் தளர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. திங்கட்கிழமைதோறும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தக் கோரிய ஜெயக்குமாரின் மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு முறையாக ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் எனவும் அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டுள்ளார்.

கடத்தல் கும்பலுடன் உணவு சாப்பிட்ட காவல் ஆய்வாளர் மாற்றம்

தஞ்சாவூர்: கஞ்சா கடத்தல் கும்பலுடன் காவல் ஆய்வாளர் பிரியாணி சாப்பிடும் புகைப்படம் (படம்) சமூக வலைத்தளத்தில் பரவி வருவதை அடுத்து, நாகை காவல் ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தஞ்சை மாவட்ட டிஐஜி கயல்விழி உத்தரவிட்டுள்ளார்.

கஞ்சா கடத்தல் தொடர்பாக தனிப்படை காவல்துறை யினரால் கைது செய்யப்பட்ட ஜெகதீசன், சிலம்பு செல்வன், நிவாஸ் ஆகியோருடன் நாகை காவல் ஆய்வாளர் பெரியசாமி காவலர் சீருடையுடன் நாகையில் உள்ள ஒரு சொகுசு உணவகத்தில் பிரியாணி சாப்பிடும் காணொளியும் புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து, தஞ்சை டிஐஜி அலுவலகத்தில் விசாரணைக்கு முன்னிலையாகும்படி கயல்விழி உத்தரவிட்டுள்ளார்.