சென்னை: நீட் தேர்வு விலக்கு சட்ட முன்வடிவிற்கு ஒப்புதல் அளிக்கக்கூடிய அதிகாரம் மாநில ஆளுநரிடம் இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்ட முன்வடிவை அதிபருக்கு அனுப்பும் அஞ்சல் ஊழியர் வேலையை மட்டும் ஆளுநர் செய்ய வேண்டும் என்றும் அதை மட்டுமே செய்யச் சொல்வதாகவும் திராவிடர் கழக மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டத்தில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
மக்களைவிட மாநில ஆளுநர்கள் அதிகாரம் மிக்கவர்களா என்று கேள்வி எழுப்பிய அவர், அப்படி ஓர் எண்ணம் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் அதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.
அஞ்சல் துறை ஊழியரின் பணியைக் கூட செய்ய மறுப்பது ஆளுநருக்கு அழகல்ல என்றும் முதல்வர் விமர்சித்தார்.
"எட்டுக்கோடி மக்களின் பிரதிநிதிகள் அனைவரும் சேர்ந்து தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை, ஒரு நியமன ஆளுநர் என்ற ஒற்றை மனிதர் திருப்பி அனுப்புகிறார். நாம் மீண்டும் அனுப்பியதையும் அதிபருக்கு அனுப்ப தொடர்ந்து மறுக்கிறார் என்றால், இந்த நாட்டில் மக்களாட்சி நடக்கிறது என்று சொல்ல முடியுமா?
"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாம் மக்களுக்கு நன்மை செய்யும் திட்டங்களைத் தீட்டினால், நியமனப் பதவியில் இருப்பவர்கள் அதை தடுப்பதை ஏற்க இயலாது," என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் இப்படி அரசின் செயல்பாடுகளில் மூக்கை நுழைக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பிய அவர், தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்து இன்றைக்கு மக்கள் முன் அம்பலப்பட்டு நிற்பதாகச் சாடினார்.
"மாநில அரசு நிர்வாகத்தில் ஆளுநர் மூக்கை நுழைத்தால் மாநில அரசுகள் முடங்கிவிடும், கைகட்டி வேடிக்கைப் பார்க்கும் என்று நினைக்கிறார்களா?
"இது மக்களாட்சி நடைபெறும் நாடு என்பதை மத்தியில் உள்ள பாஜக அரசு உணர வேண்டும். நீட் தேர்வு என்பது மருத்துவக் கல்லூரிக்குள் நுழைய அனுமதிக்கும் தேர்வு மட்டுமல்ல, அது மருத்துவக் கல்வி என்பதை உயர் வர்க்கத்தின் கல்வியாக மாற்ற நினைக்கிற தேர்வு. அதனால்தான் இது 'நவீன அறிவுத் தீண்டாமை' என்று சட்டப்பேரவையில் குறிப்பிட்டேன்," என்றார் முதல்வர் ஸ்டாலின்.

