பெங்களூரு: மலேரியா ஒழிப்புப் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட தமிழக அரசுக்கு மத்திய சுகாதார அமைச்சு விருது வழங்கி உள்ளது.
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் மலேரியா அறவே இல்லை என்பதால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக தமிழக பொது சுகாதாரத் துறை சிறப்பு இயக்குநர் டாக்டர் வடிவேலன் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் மலேரியா நோயை முழுமையாக ஒழித்திட மாநில அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் 1990களில் 1.20 லட்சமாக இருந்த மலேரியா நோய் பாதிப்பு எண்ணிக்கை, 2011ஆம் ஆண்டில் 22,171ஆக குறைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது தமிழகத்தில் 772 பேருக்கு மட்டுமே மலேரியா பாதிப்பு உள்ளது என்றும் நோயைக் கண்டறியத் தேவையான ஆய்வக வசதிகள் உள்ளன என்றும் மாநில சுகாதாரத்துறை தெரிவிக்கிறது.
இந்தியாவில் மலேரியாவை 2030ஆம் ஆண்டுக்குள் ஒழிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், 2024ஆம் ஆண்டுக்குள் தமிழகம் அந்த இலக்கை எட்டிப்பிடிக்கும் என தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

