சென்னை: தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக செயல்பட்டு வருவதாக துணை அதிபர் வெங்கய்ய நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.
தொழில் துறையில் தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்குகிறது என்று சென்னையில் நடைபெற்ற விருது விழாவில் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் ஏற்றுமதி முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் தமிழகம் தொழில் துறை உற்பத்திக்கான சிறந்த கட்டமைப்பைப் பெற்றுள்ள மாநிலமாகத் திகழ்கிறது என்றும் துணை அதிபர் கூறினார்.
"ஆட்டோ மொபைல், வாகன உதிரிப் பாகங்கள், தோல் பொருள்கள், மென்பொருள்கள், ஆயத்த ஆடை ஏற்றுமதியில் நாட்டுக்கே முன்னோடியாகத் தமிழகம் விளங்கி வருகிறது.
"சென்னை - பெங்களூரு தொழில் வழித்தடம், சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தடம் ஆகியவை நிறைவடையும்போது மாநிலத்தின் பொருளாதார திறனில் மேலும் மாற்றம் ஏற்பட்டு, ஏற்றுமதிக்கான மிகப்பெரும் வாய்ப்புகளை ஏற்படுத்தும்," என்றார் துணை அதிபர் வெங்கையா நாயுடு.
வலுவான கட்டமைப்பு, நான்கு அனைத்துலக விமான நிலையங்கள், மூன்று மிகப்பெரும் கடல் துறைமுகங்கள், பல்வேறு சிறு கடல் துறைமுகங்கள் ஆகியவற்றுடன் சிறந்த போக்குவரத்து வசதிகளுடன் நாட்டில் மூன்றாவது பெரும் ஏற்றுமதி மாநிலமாக தமிழகம் மாறிஉள்ளது என்றும் அவர் கூறினார்.

