முக்கிய அறிவிப்பை வெளியிடத் தயாராகும் சசிகலா
திருச்சி: தமது அடுத்தக்கட்ட அரசியல் பயணம் குறித்து விரைவில் அறிவிக்க இருப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைவாசம் முடிந்த பின்னர் சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அதிமுக தலைமையுடனான மோதல் நீடிப்பதால் அவர் இன்னும் அடக்கி வாசிக்கிறார்.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்து ஓராண்டு ஆகும் நிலையில், இன்னும் ஆன்மிகப் பயணத்திலேயே உள்ளார் சசிகலா.
இந்நிலையில் அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றடைந்தார். அங்கு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்மிகச் சுற்றுப்பயணத்தை தாம் நிறைவு செய்துள்ளதாகவும் விரைவில் அரசியல் பயணத்தைத் தொடங்க இருப்பதாகவும் கூறினார்.
மேலும், அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பான வழக்கில் மேல் முறையீடு செய்ய தாம் முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், அரசியல் பயணம் எப்போது தொடங்கும் என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, 'பொறுத்திருந்து பாருங்கள்' என்று அவர் பதிலளித்தார்.
மேலும், தம்மை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் கூடிய அமமுக தொண்டர்கள் மீது அக்கட்சிப் பொதுச்செயலாளர் தினகரன் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்குப் பதிலளிக்க மறுத்தார் சசிகலா.
தாம் கோவிலுக்குச் செல்ல இருப்பதாகவும் இதுபோன்ற கேள்விகளுக்கு பின்னர் பதிலளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்கக் கூடாது என்பதில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உறுதியாக உள்ளார்.
எனினும், ஓ.பன்னீர்செல்வம், அவ்வப்போது சசிகலாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்.
எனவே, சசிகலா ஏதேனும் முக்கிய அறிவிப்பை வெளியிடும்போது, அதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஆதரவளிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, கோடநாடு வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சஞ்சய் பாபா மாற்றப்பட்டுள்ளார். மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றி வந்த அவர், தற்போது மாவட்ட முதன்மை நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
ஏற்கெனவே கோடநாடு வழக்கை விசாரித்து வந்த நீதிபதி வடமலை திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதன் பின்னர், சஞ்சய் பாபா இந்த வழக்கை கடந்த ஓராண்டாக விசாரித்து வந்தார். இந்நிலையில் அவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

