தடுப்பூசி ஒன்றே கைவசம் உள்ள ஆயுதம் என்கிறார் முதல்வர்
புதுடெல்லி: கொரோனா விவகாரம் தொடர்பில் எந்த ஒரு சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதுடன், தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். நேற்று முன்தினம் ஆட்சியாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட அவர், பெருந்தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே கைவசம் உள்ள ஆயுதம் என்றார்.
வாழை சார்ந்த தொழில்களுக்கு உலகளாவிய சந்தை: அரசு விருப்பம்
சென்னை: வாழை தொடர்புடைய தொழில்களுக்கு உலகளாவிய சந்தை ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியம் என தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். வாழை மரங்கள் அல்லது வாழை நாரை மையமாக வைத்து தொழில் தொடங்குவதற்கு தமிழக அரசுக்கு ஒரு திட்டம் இருக்கிறது என்று சட்டப்பேரவையில் அவர் குறிப்பிட்டார். "நெல்லை மாவட்டத்தை ஒட்டியிருக்கக்கூடிய திருவைகுண்டம் பகுதியில் நிறைய வாழை மரங்கள் உள்ளன. அங்கிருந்துதான், தமிழகத்துக்கு தேவையான வாழை பெரும்பகுதி வருகிறது. எனவே அதை மையமாக வைத்துக்கூட வாழை சார்ந்த தொழில்களுக்கான தொழிற்சாலைகளை அமைக்கலாம்," என்றார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
அம்பேத்கர் பிறந்தநாளன்று மோதல்: காயத்ரி ரகுராமுக்கு நிபந்தனை பிணை
சென்னை: கடந்த 15ஆம் தேதி, அம்பேத்கர் பிறந்தநாளன்று சென்னையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிப்பது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள், பாஜக கட்சியினரிடையே மோதல் வெடித்தது. இது தொடர்பாக பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் உட்பட சிலர் மீது வழக்குப் பதிவானது. இதையடுத்து, தமக்கு முன்பிணை வழங்கக் கோரி காயத்ரி ரகுராம் உயர் நீதிமன்றத்தை அணுகியதை அடுத்து, நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கப்பட்டுள்ளது.
மோடி படம்: பாஜக போராட்டம்
சென்னை: அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிரதமர் மோடியின் புகைப்படத்தை மாட்ட அனுமதி அளிக்கக்கோரி கோவையில் பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, அதில் பங்கேற்ற அனைவரையும் போலிசார் கைது செய்தபோது, போராட்டத்தை வேடிக்கை பார்க்க வந்த ஒரு மூதாட்டியும் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர், தாம் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்று எடுத்துச் சொல்லி கெஞ்சியதை அடுத்து விடுவிக்கப்பட்டார்.

