சிதம்பரம்: மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இந்தக் கல்லூரியை கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால் கல்விக் கட்டணங்கள் பெருமளவு குறைக்கப்பட்டன.
இதனால் நடப்பு கல்வியாண்டில் முதலாமாண்டு மாணவர்கள் பலன் அடைந்துள்ளனர். அவர்களுக்கு அரசு கல்விக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.13 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற மாணவர்கள் கல்விக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.4 லட்சம் செலுத்த வேண்டியுள்ளது.
இதற்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஒரே கல்லூரியில் இரு வேறான கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என மாணவர்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மற்ற அரசுக் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் வசூலிப்பது போல், இங்கேயும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று கூறி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 11ஆம் தேதி முதல் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இரண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நாள்தோறும் வெவ்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 15 நாள்களாக போராட்டம் நீடித்ததை அடுத்து, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் பயிற்சி மருத்துவர்கள் தவிர, மற்ற மாணவர்களுக்கும் காலவரையற்ற விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக பதிவாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து மாணவர்கள் உடனடியாக பல்கலைக்கழக விடுதியில் இருந்து உடனடியாக காலி செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
எனினும், மாணவர்கள் இதை ஏற்கவில்லை. விடுதியை விட்டு வெளியேற இயலாது என்று திட்டவட்டமாகக் கூறியதுடன், மருத்துவமனை வளாகத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் ஒன்றுகூடி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

