மதுரை: மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்த விவகாரத்தில் விபத்திற்கு காரணமான ஒப்பந்த நிறுவனத்துக்கு மூன்று கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், கட்டுமான ஆலோசனை நிறுவனத்திற்கும் ரூ. 40 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு மதுரை புதுநத்தம் சாலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.545 கோடி மதிப்பில், 7.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியது.
அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில், மேம்பாலத்தின் அருகேயுள்ள இணைப்புப் பாலத்தின் ஒரு பகுதி 2021 ஆகஸ்ட் 28ஆம் தேதி மாலை இடிந்து விபத்துக்குள்ளானது. இதில் தொழிலாளர் ஒருவர் படுகாயம் அடைந்து பலியானார்.
இது தொடர்பாக நிபுணர்கள் குழு விசாரணை நடத்தியதில், இயந்திரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறும் அனுபவமற்ற தொழிலாளர்களைப் பயன்படுத்தியதும்தான் விபத்துக்கு காரணம் எனத் தெரிய வந்தது.
இதையடுத்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கட்டுமானம் தொடர்பாக நிபுணர் குழு அளித்த பரிந்துரையின்படி, விபத்து நடந்த இடத்தில் ஏற்பட்ட சேதங்கள் சரிசெய்யப்பட்டுள்ளன. எனவே, வரும் அக்டோபர் மாதம் இந்தப் பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

