தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 27) அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகாலை 3.15 மணியளவில் கீழத் தெருவிலிருந்து முதன்மைச் சாலைக்கு வந்த இத்தேர் திருப்பத்தில் திரும்பியபோது, மேலே சுமார் 30 அடி உயரத்தில் உள்ள உயரழுத்த மின் பாதையில் தேரின் அலங்கார தட்டி உரசியது. இதனால் தேரை இழுத்து வந்த மக்கள் மீதும், சுற்றி இருந்தவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "தேர் நிலைக்கு வருவதற்கு 15 நிமிடங்கள் இருந்த நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்தது. தேர் வரும் வழியில் தண்ணீர் ஊற்றப்பட்டு வந்ததால் மின்சாரம் பாய்ந்தபோது பாதிப்பு அதிகமாகிவிட்டது," என தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அளிப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

