உயிர்வாயு உருளைகள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின; உயிரிழப்புகள் இல்லை
சென்னை: ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, தீயணைப்புத் துறையினர் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும், பல நோயாளிகளை பத்திரமாக மீட்டனர்.
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தின் பின்பகுதியில் உள்ள பழைய கட்டடம் ஒன்றில் நரம்பியல் பிரிவு செயல்பட்டு வருகிறது.
அதன் அருகே, 'ஸ்கேன்' மையங்கள் இயங்கி வருகின்றன. மற்றொரு சிறிய கட்டடத்தில் அறுவை சிகிச்சைக்குத் தேவையான பொருள்களும் உயிர்வாயு உருளைகளும் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், நேற்று காலை நரம்பியல் பிரிவு செயல்படும் கட்டடத்தில் 11 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. அடுத்த சில நிமிடங்களில் பெரும் புகையுடன் வந்த தீ, மளமளவென பரவத் தொடங்கியது.
அந்தக் கட்டடம் முழுவதையும் புகை சூழ, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து சேர்வதற்குள் மருத்துவமனை ஊழியர்கள், நரம்பியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளை மீட்டனர்.
எனினும், நூற்றுக்கும் அதிகமான பணியாளர்களும் நோயாளிகளும் கட்டடத்துக்குள் சிக்கிக் கொண்டனர்.
எனினும் உயிர்வாயு உருளைகள் வைக்கப்பட்டிருந்த பகுதிக்கும் தீ பரவியதால் அவை ஒன்றன்பின் ஒன்றாக வெடித்துச் சிதறத் தொடங்கின. இதையடுத்து பெரும் பதற்றம் நிலவியது.
இதற்கிடையே, அங்கு விரைந்து வந்த நான்கு தீயணைப்பு வாகனங்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டன. தீயணைப்பு வீரர்கள் கட்டடத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியைத் தொடங்கினர்.
கட்டடத்தில் சிக்கிய பலர், கட்டடத்தின் மொட்டை மாடியில் தஞ்சமடைந்து, அங்கிருந்து உதவி கேட்டு கூச்சலெழுப்பினர். மிகப்பெரிய ஏணியைக் கொண்டு அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர்.
இதற்கிடையே, அங்கு விரைந்து வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த தீ விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றார். மேலும், தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் இயங்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து மூன்று நோயாளிகள் உட்பட 32 பேர் மீட்கப்பட்டதாக தெரிவித்தார்.

