சென்னை: கல்லூரி மாணவிகள் குடுமிப்பிடிச் சண்டையில் ஈடுபட்டதால் சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு இயங்கி வரும் அரசு கலை, தொழிற் கல்வி கல்லூரியில் படித்து வரும் மாணவிகள் பலர் அங்குள்ள பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர்.
அப்போது இரு குழுக்களாகச் செயல்பட்டு வரும் மாணவிகளுக்கு இடையே அங்கு திடீரென வாக்குவாதம் மூண்டது. ஒருவரையொருவர் மோசமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர்.
இந்நிலையில் திடீரென்று மாணவிகள் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டதால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களில் சிலர் தலைமுடியைப் பிடித்து இழுத்தும், கன்னத்தில் அறைந்தும் சண்டையிட்ட மாணவிகளை முடிந்தவரை விலக்கிவிட்டனர்.
இந்நிலையில் தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மாணவிகளை கடுமையாக எச்சரித்த காவல்துறை அதிகாரி மீண்டும் இதுபோன்று நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மாணவிகளின் குடுமிப்பிடிச் சண்டையை பொதுமக்களில் ஒருவர் தமது கைபேசியில் காணொளியாகப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதை அடுத்து, அது பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இதற்கிடையே, சம்பந்தப்பட்ட மாணவிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். இது விவாதப்பொருளாகி உள்ளது.

