நடிகர் விமல் அளித்த மோசடிப் புகார்: திரைப்பட விநியோகிப்பாளர் கைது
சென்னை: நடிகர் விமல் அளித்த பண மோசடிப் புகார் தொடர்பாக சினிமா விநியோகிப்பாளர் சிங்காரவேலன் கைதாகி உள்ளார். 'மன்னர் வகையறா' என்ற படத்தின் தயாரிப்புக்காகப் பெற்ற ரூ.1.74 கோடியை நடிகர் விமல் தரவில்லை என்று தயாரிப்பாளர் கோபி என்பவர் காவல்துறையில் அண்மையில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது. அப்போது சிங்காரவேலன் என்பவர்தான் தனது பெயரைப் பயன்படுத்தி, பணம் பெற்று மோசடி செய்ததாக விமல் கூறியிருந்தார். ஆனால் சிங்காரவேலன் இதை திட்டவட்டமாக மறுத்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் விமல் பெயரில் ஒரு நிறுவனத்தை நடத்தி, அதன் பேரில் வங்கிக்கணக்கு தொடங்கியதாகவும் அந்த நிறுவனத்துக்காக விமலிடம் பல பத்திரங்களில் கையெழுத்து வாங்கியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
லஞ்சம் பெற்ற காவல் உதவி ஆய்வாளர் அதிரடிக் கைது
விருதுநகர்: பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் கைதானார். விருதுநகர் மாவட்டம் எம்.ரெட்டியபட்டி பகுதி காவல் நிலையத்தில், உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார் ராமநாதன். அண்மையில் அப்பகுதியில் உள்ள எல்லைக்கற்கள் உடைக்கப்பட்டது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் ராமசாமிபட்டியை சேர்ந்த தங்கமணி உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்குப் பதிவானது. இந்நிலையில், இவ்வழக்கில் பிணை பெற்ற மூன்று பேரும் காவல் நிலையத்துக்கு தினமும் வந்து கையெழுத்திட உத்தரவிடப்பட்டிருந்தது. அப்போது தங்கமணி காவல் நிலையத்துக்கு வராமல் இருக்க, அவரிடம் உதவி ஆய்வாளர் ராமநாதன் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து தங்கமணி லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் புகார் அளித்தார். அவர்கள் அளித்த ஆலோசனையின்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அவர் உதவி ஆய்வாளரிடம் கொடுக்க, அதைப் பெற்றுக்கொண்ட ராமநாதனை லஞ்ச ஒழிப்பு காவல்துறை அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடித்தனர்.
கைத்தறி நெசவாளர்கள் போராட்டம்
திருப்பூர்: தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு பட்டா வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, திருப்பூர் கைத்தறி நெசவாளர்கள் புதன்கிழமை அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காங்கேயம், தாராபுரம், மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர்கள் திரளாக பங்கேற்றனர். "திருப்பூர் மாவட்டத்திலுள்ள கைத்தறி நெசவாளர்கள் 118 பேருக்கு மடத்துக்குளம் அருகே உள்ள தாந்தோணி கிராமத்தில் தலா 3 சென்ட் வீதம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதன் பிறகு அந்த இடத்தை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் வேறு நபர்களுக்கு ஒதுக்கிவிட்டனர். எங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்," என நெசவாளர்கள் தெரிவித்தனர்.

