சென்னை: ஐஐடி கல்வி நிலையத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 171ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தின் புதிய கொரோனா பரவல் மையமாக சென்னை ஐஐடி உருவெடுத்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் அன்றாட எண்ணிக்கை நூற்றுக்கும் குறைவாகவே பதிவாகி வருகிறது.
இந்நிலையில், நாட்டின் உயர் கல்வி நிலையங்களில் ஒன்றான ஐஐடியில் திடீரென கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
எனினும், அங்கு பாதிக்கப்பட்டவர்கள் யாருக்கும் கொரோனாவின் புதிய வகை பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்கள் தொற்றில் இருந்து குணமடைந்து வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐஐடி மையத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தாலும் கவலைப்படத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், தொற்றுப்பரவல் ஓரிரு நாள்களில் கட்டுக்குள் வரும் என்று கூறியுள்ளனர்.
இதற்கிடையே, ஐஐடியில் பாதிக்கப்பட்ட பெரும்பாலனோருக்கு 'ஒமைக்ரான் பிஏ2' வகை தொற்று இருப்பதாகவும் இது வேகமாக பரவக்கூடியது என்பதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் ஒருதரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, சென்னையில் நேற்று முன்தினம் 59 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

