சென்னை: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகச் செயல்படுத்தப்பட்டு வரும் 'ஆபரேஷன் கஞ்சா 2.0' நடவடிக்கை மூலம் இதுவரை 2,423 பேர் கைதாகி உள்ளனர் என்று தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.
கடந்த 31 நாள்களில் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் போதைப் பழக்கத்துக்கு அடிமையாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, போதைப் பாக்குகள் (குட்கா), கஞ்சா ஆகியவற்றை விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் கஞ்சா 2.0' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக, தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறையினர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு கஞ்சா வியாபாரிகளை வளைத்துப் பிடித்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இதுவரை 3,562 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 10 கஞ்சா வியாபாரிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களிலும் கஞ்சா வியாபாரிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கைகளின் மூலம் குட்கா வியாபாரிகளும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதுவரை 6,319 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் இருந்து 44.9 டன் குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்ட 113 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ள நிலையில், இந்த கைது நடவடிக்கை மேலும் நீடிக்கும் எனத் தெரிகிறது.
குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப்பொருள்களை ரகசியமாக விற்று வந்தவர்களைக் குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், போதை மாத்திரைகளை விற்கும் குழுக்களைக் கண்காணித்து, அதில் ஈடுபட்டுள்ள அனைவரையும் மொத்தமாக கைது செய்யும் நடவடிக்கையும் தீவிரமடைந்து உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் இந்தத் தொடர் அதிரடி நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

