சென்னை: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள நான்கு மின் உற்பத்திப் பிரிவுகளில் பணிகள் முடங்கி உள்ளன. போதுமான நிலக்கரி கையிருப்பில் இல்லாததே இந்த முடக்கத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட ஐந்து மின் உற்பத்தி இயந்திரங்கள் இயங்கி வருகின்றன. இதன்மூலம் நாளொன்றுக்கு 1,050 மெகாவாட் மின்சாரம் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் நிலவும் நிலக்கரி தட்டுப்பாடு தூத்துக்குடி அனல்மின் நிலைய பணிகளையும் பாதித்துள்ளது.
இங்குள்ள நான்கு அலகுகளின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஒரேயொரு அலகில் மட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த சில தினங்களாகவே மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உடனடியாக நிலக்கரி வரத்தை அதிகரிக்கவேண்டும் என்றும் அனல்மின் நிலைய அதிகாரிகள் அரசிடம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாகப் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
மத்திய மின் தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு வர வேண்டிய மின்சாரம் வந்து சேராததே மின் வெட்டுக்குக் காரணம் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
மேலும், நிலக்கரி பற்றாக்குறைக்குத் தீர்வுகாண உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, மின் விநியோகம் சீரடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையே, ஒடிசா மாநிலத்தில் உள்ள ஹின்குலா உட்பட ஐந்து சுரங்கங்களில் இருந்து தமிழக மின் வாரியத்திற்கு 26 கோடி கிலோ நிலக்கரியை ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

