திருவரங்கம் தேரோட்டம்: மூன்று மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும்
திருச்சி: திருவரங்கம் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு, மூன்று மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று காலை தேரோட்டம் நடக்கும் பகுதியில் காலை 6 முதல் 9 மணி வரை மின்தடை ஏற்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். தஞ்சையில் தேரோட்டத்தின்போது மின்சாரம் தாக்கி 11 பேர் பலியானதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பள்ளி மாணவர்கள் மீண்டும் மோதல்: அறிவுரை கூறி எச்சரித்த காவல்துறை
கோவை: தமிழகத்தில் அண்மைக் காலமாக அரசுப் பள்ளி மாணவர்கள் தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து மாணவர்கள் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திர பாபு கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில், கோவை மாவட்டம், ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து சண்டை யிட்டுள்ளனர். சாலையின் நடுவே நின்று ஒருவரையொருவர் அடித்து தாக்கிக்கொண்ட காட்சி காணொளியாக சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. இதையடுத்து காவல்துறையினர் பள்ளிக்கு நேரில் சென்று மோதலில் ஈடுபட்ட மாணவர்களுக்கு அறிவுரை கூறியதுடன், இனி இதுபோன்று செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்தனர்.
இலங்கையில் இருந்து விசைப்படகில் வந்த இரு ஆடவர்களிடம் விசாரணை
ராமநாதபுரம்: இலங்கையில் இருந்து தொண்டி பகுதிக்கு விசைப்படகுகளில் வந்து சேர்ந்த இரண்டு இளையர்கள் அகதிகளா அல்லது கடத்தல்காரர்களா என ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை விசாரித்து வருகிறது. 27 வயதான சீலன், 34 வயதான அருள்ராஜ் ஆகிய அவ்விரு ஆடவர்களும் கடலோரக் காவல்படையின் விசாரணையின்போது இலங்கையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்ததாகவும் அங்கு பொருளியல் நெருக்கடி நிலவுவதால் வாழ வழியின்றி தமிழகம் வந்ததாகவும் கூறியுள்ளனர். தொண்டியம் கடற்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட இருவரிடமும் உடை உள்ளிட்ட உடைமைகள் எதுவும் இல்லை.
ஆளும் கட்சியைக் குறைகூற வேண்டாம் என்கிறார் சசிகலா
தஞ்சை: ஆளும் கட்சியைக் குறைகூறுவது மட்டுமே எதிர்க்கட்சிகளின் வேலை அல்ல என்று சசிகலா கூறியுள்ளார். தஞ்சையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினரை நள்ளிரவில் சந்தித்து ஆறுதல் கூறிய அவர், நடந்த விபத்துக்கு ஆளும் கட்சியைக் குறைகூறுவது சரியல்ல என்றார். எதிர்க்கட்சிகள் என்பதால் சிலர் எதையாவது கூறிக்கொண்டுதான் இருப்பார்கள் என்றும் சசிகலா தெரிவித்தார்.

