சென்னை: தீ விபத்தில் சேதம் அடைந்துள்ள சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்டப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சேதமடைந்த கட்டடம் இடிக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் நேற்று அவர் அறிவித்தார்.
நேற்று முன்தினம் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் 128 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் விபத்து குறித்து அறிந்ததும் முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
"சம்பவம் நடைபெற்ற பத்து நிமிடங்களுக்குள்ளாகவே நான்கு தீயணைப்பு வாகனங்கள் விபத்து பகுதிக்குச் சென்று மீட்புப் பணிகள் தொடங்கிவிட்டன.
"ஊடகவியலாளர்களும் நேரடியாக நோயாளிகளை மீட்டனர். அரசு மேற்கொண்ட அதிதீவிர நடவடிக்கை காரணமாக உயிரிழப்பு ஏதும் இல்லை," என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

