மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அழகாபுரியைச் சேர்ந்தவர் மோனிஷா, 23. இவருக்கும் சிவகங்கை மாவட்டம் கண்டாங்கிபட்டி பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், 30, என்பவருக்கும் மணமாகி 3 வயது ஆண் குழந்தை உள்ளது.
நாள்தோறும் குடித்துவிட்டு அடித்து துன்புறுத்துவதாக கணவர் மீது மோனிஷா அளித்த புகாரைத் தொடர்ந்து காவல்
துறையினர் தலையிட்டு பாலகிருஷ்ணனை எச்சரித்து எழுதி வாங்கினர்.
மீண்டும் தம்பதியிடையே சண்டை ஏற்பட்ட நிலையில், மோனிஷா கோபித்துக்கொண்டு மகனுடன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
திரும்பி வராத மனைவி இறந்துவிட்டதாகக் கூறி கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி தயாரித்த பாலகிருஷ்ணன், அதை சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.
அதனைக் காட்டி உறவினர்களை நம்ப வைத்து உறவுக்காரப் பெண் ஒருவரை 2வது திருமணம் செய்து அதை பேஸ்புக்கிலும் பதிவிட்டுள்ளார் அவர்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மோனிஷா, சமயநல்லூர் மகளிர் காவல்
நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

