தேனி: தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் பட்டம் பெற வேண்டும் என்பதே அரசின் எண்ணம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேனியில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய அவர், பெண் கல்விக்கு எதிரான அத்தனை தடைகளையும் அரசு தகர்த்தெறியும் என்றார்.
மேலும், தேர்தலின்போது அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்றும் என்றும் முதல்வர் உறுதி அளித்தார்.
நேற்று நடைபெற்ற அரசு விழாவில் அவர், 11,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் முடிவுற்ற திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
"பெண்கள் முறையான கல்வியைப் பெற்றால் வாழ்க்கையில் எத்தனை தடைகளை வேண்டுமானாலும் எதிர்கொள்ள முடியும்.எனவேதான் பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் விதமாக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஆறு லட்சம் மாணவிகள் பயனடைவார்கள்," என்றார் முதல்வர் ஸ்டாலின்.
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
"மக்களுக்கு சேவை செய்வதற்கே நேரம் போதுமானதாக இல்லை. எனவே திமுக அரசு குறித்து எழும் விமர்சனங்களுக்கு பதில் தர விரும்பவில்லை.
"மறைந்த முதல்வர் எம்ஜிஆரிடம் இருந்த அரசியல் நாகரிகம் தற்போது உள்ளவர்களிடம் இல்லை," என்றார் முதல்வர் ஸ்டாலின்.
133 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்துக்கு ரூ.64 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதன்மூலம் இருநூறாயிரம் இளையர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றார்.
"வளர்ச்சி என்பதை அனைவருக்கும் சாத்தியப்படுத்துவதே திராவிட முன்மாதிரி. இதுதான் எங்களுடைய வழக்கம். இதுவே நல்ல ஆட்சிக்கான இலக்கணம்.
"அதனால்தான் அரசின் அனைத்து திட்டங்களும் மக்களைச் சென்றடையும் வகையில் ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து செயல்படுத்தி வருகிறோம். இந்தப் பணி தொடர்ந்து நடைபெறும்," என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

