திருப்பூர்: இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட கையை அறுவை சிகிச்சை மூலம் ஒட்ட வைத்து கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் கணேஷ். 21 வயதான இவர் திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி குடும்பத் தகராறு காரணமாக, உறவினர் ஒருவர் கணேஷை அரிவாள் கொண்டு சரமாரியாகத் தாக்கினார். இதில் அவரது முதுகு, கழுத்து, ஆகியவற்றில் கடும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டதுடன், கணேஷின் வலது கையும் துண்டானது.
இதைக்கண்டு கடும் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தைச் சேர்ந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மேலும், அவரது துண்டான கைவிரல்கள் ஈரத்துணியால் சுற்றி ஐஸ்கட்டி பெட்டியில் வைத்து பத்திரமாக கொண்டு வரப்பட்டன.
கணேஷின் வலது கை இரண்டு துண்டாக வெட்டப்பட்டிருந்ததை அடுத்து, அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்வது என அரசு மருத்துவர்கள் குழு முடிவு செய்தது. இதையடுத்து மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இதன் மூலம் துண்டான கையையும் விரல்களையும் மீண்டும் உடலுடன் இணைத்த மருத்துவர்கள், எலும்புகள், தசைகள், நரம்புகள், ரத்தக் குழாய்களும் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாக அரசு மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து கணேஷ் கடந்த இருபது நாள்களாக மருத்துவர்களின் மேற்பார்வையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்தார்.
சிக்கலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு கணேஷ் இப்போது நன்கு குணமடைந்து வருவதாகவும் அவரது கைகள் பழையபடி இயங்கும் என்றும் தெரியவந்துள்ளது. அறுவை சிகிச்சை மேற்கொண்ட அரசு மருத்துவக் குழுவுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
கணேஷுக்கு தொடர்ந்து மருத்துவ ஆலோசனை வழங்கப்படும் எனத் தெரிகிறது.

