செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
6a5ace35-4cbd-4e6d-9afb-837c8998ec04
-

முதல்வருக்கு கேள்வி எழுப்பிய சீமான்

சென்னை: மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த தங்கமணி என்பவர் காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

'ஜெய்பீம்' திரைப்படத்தைப் பார்த்து கண்ணீர் சிந்திய முதல்வர் ஸ்டாலின், தமது ஆட்சியில் நடக்கும் விசாரணை மரணங்கள் குறித்து அமைதி காப்பது ஏன்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

'பப்ஜி' மதன் பிணை கோரி மனு: உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவு

சென்னை: இணைய விளையாட்டுகள் மூலம் சிறுவர்களை தவறான வழிக்கு கொண்டு சென்று பணம் பறித்த வழக்கில் கைதான 'பப்ஜி' மதன் தமக்கு பிணை வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். முன்னதாக அவரது பிணை மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், மதனின் மனுவுக்கு பதில் மனுத்தாக்கல் செய்ய காவல்துறைக்கு உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பள்ளியில் வைத்து தாலி கட்டிய மாணவன்

கிருஷ்ணகிரி: அரசுப் பள்ளி மாணவிக்கு மாணவன் தாலி கட்டிய சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பகுதியில் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு மஞ்சள் கயிற்றை தாலியாகக் கட்டியுள்ளான் அதே வகுப்பில் படிக்கும் மாணவன். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவியர் சிலர், சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் பின்னர் மாணவியின் பெற்றோர் தலைமை ஆசிரியையிடம் முறையிட, மாணவனின் பெற்றோரும் வரவழைக்கப்பட்டனர். இதன் முடிவில் பெற்றோரின் முன்னிலையில் இருவரையும் எச்சரித்து அனுப்பியுள்ளார் தலைமை ஆசிரியை. அடுத்த மாதம் இறுதித்தேர்வு நடைபெற இருப்பதால் இருவர் மீதும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.