திருப்பத்தூர்: மூளைச்சாவு அடைந்தவரின் இதயத்தை வேலூரில் இருந்து 84 நிமிடங்களில் சென்னைக்கு கொண்டு வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான 21 வயது தினகரன் என்பவர் இரு தினங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கிப் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனால் மனமுடைந்து போனாலும் தன் மகனின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.
அதன்படி தினகரனின் இதயத்தை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 41 வயது ஆடவருக்குப் பொருத்துவது என முடிவானது. அவரது கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள் ஆகிய உறுப்புகள் வேலூரில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டன.
இதையடுத்து வேலூரில் இருந்து அவரது இதயத்தை சென்னைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடைபெற்றன.
மாநில காவல்துறை, போக்குவரத்துத் துறை ஆகியவற்றுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் மாலை 3.10 மணியளவில் தினகரனின் இதயம் வைக்கப்பட்ட பெட்டியுடன் சென்னையை நோக்கிப் புறப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டுநர் வேல்முருகன் என்பவர் ஓட்டினார். வழியெங்கும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதனால் வேலூரில் இருந்து புறப்பட்டு 84ஆவது நிமிடத்தில் சென்னை வந்தடைந்தார் வேல்முருகன். இதுகுறித்த தகவல் சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து அவருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

