சென்னை: கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் ஆலயத்துக்குச் செல்ல தமிழக மக்கள் அனுமதிச்சீட்டு பெற வேண்டும் என்ற நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
அண்மையில் இலங்கை சென்று திரும்பியுள்ள அவர், தமிழக மீனவர்களிடம் இருந்து இலங்கைக் கடற்படை பறிமுதல் செய்த படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசும்போதே அவர் இந்த கோரிக்கைகளை முன்வைத்தார்.
இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறி, தமிழக மீனவர்கள் மீது கடும் நடவடிக்கையை எடுப்பதைக் கைவிட்டு, இப்பிரச்சினையை இலங்கை அரசு மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும் என்றார் அண்ணாமலை.
தமது கோரிக்கைகள் குறித்து இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் கவனத்துக்கு கொண்டு சென்றதாக குறிப்பிட்ட அவர், இது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் முறையிட வேண்டும் என அக்கட்சிகளைக் கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
"கடந்த 1974ஆம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தத்தின்படி, தமிழக மீனவர்கள் அத்தீவில் வலைகளைக் காயப் போடுவதற்கும் அதைக் கடந்து நெடுந்தீவு வரை சென்று மீன் பிடிப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த ஒப்பந்தத்தில், தமிழக மீனவர்களின் மேற்குறிப்பிட்ட உரிமையை உறுதி செய்யும் 6வது பிரிவை, 1976ஆம் ஆண்டு இலங்கை அரசு நீக்கியது. "எனவே, அந்தப் பிரிவை மீண்டும் கச்சத்தீவு ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்துகிறது," என்று அண்ணாமலை மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏழு மாதங்களில் மட்டும் இந்தியா சார்பில் இலங்கைக்கு ரூ.11 ஆயிரம் கோடி மதிப்பிலான உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.