விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என மத்திய அமைச்சர், எம்.பி. தகவல்
மதுரை: மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இம்மருத்துவமனையைக் கட்டுவதற்கு ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஜைக்கா என்ற நிறுவனம் 1,500 கோடி ரூபாய் நிதி அளிக்க உள்ளதாகவும் இது தொடர்பாக அந்நிறுவனம் மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதுரையை அடுத்துள்ள தோப்பூர் பகுதியில் அமைய உள்ளது எய்ம்ஸ் மருத்துவமனை. மொத்தம் 224 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இம்மருத்துவமனையைக் கட்டி முடித்து செயல்பாட்டுக்கு கொண்டுவர ரூ. 1,977 கோடி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதமே கட்டுமானப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
எனினும், நிதி ஒதுக்கீடு செய்யாதது, கொரோனா பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கட்டுமானப் பணிகள் ஏதும் நடைபெறவில்லை.
இந்தத் திட்டத்தை மத்திய அரசு கிடப்பில் போட்டுவிட்டதாக தமிழக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இதே வேளையில் பஞ்சாப், அசாம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அறிவிப்புகள் வெளியாகி கட்டுமானப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் மீண்டும் வேகமெடுத்தன. மருத்துவமனைக்கான நிலத்தை தமிழக அரசு முழுமையாக ஒப்படைத்ததாக தகவல் வெளியானது.
கடந்த மாதம் ஜப்பானைச் சேர்ந்த ஜைக்கா நிறுவனம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு முன்வந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சும் தகவல் வெளியிட்டது.
அந்நிறுவனம் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கான மொத்த செலவில் சுமார் 85 விழுக்காட்டை ஏற்றுக்கொள்ளும் என்றும் தெரிவித்தது.
இந்நிலையில், ஜப்பான் நிறுவனம் ரூ. 1,500 கோடி ஒதுக்கி உள்ளதை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதி செய்துள்ளார். மருத்துவமனைக் கட்டுமானப் பணிக்குத் தேவைப்படும் மீதமுள்ள தொகையை அக்டோபர் 26ஆம் தேதிக்குள் ஒதுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் எனத் தம்மிடம் தெரிவிக்கப்பட்டதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனைக்காக தாம் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டுமானம் தொடர்பான ஒவ்வொரு நகர்வுகளுக்கும் பெரும் முயற்சி செய்து வருகிறேன். அதன்படி நாடாளுமன்ற விதி எண் 377இன்படி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக முழு விவரங்களைத் தரும்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தேன். அதுதொடர்பான முழு விவரத்தையும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அளித்துள்ளார்," என்று வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டுமானப் பணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புக்குப் பின்னர், அது அமைய உள்ள பகுதியில் சில சாலைகள் அமைத்து, சுற்றுச்சுவர் மட்டுமே எழுப்பப்பட்டுள்ள வகையில் அங்கு மிக விரைவில் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.