தஞ்சாவூர்: கேரளாவில் 'ஷவர்மா' கோழி உணவைச் சாப்பிட்டு மாணவி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் இந்த உணவு குறித்த புகார்கள் எழுந்தன.
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் பிரவீன், பரிமளேஸ்வரன், மணிகண்டன் ஆகிய மூன்று மாணவர்களும் இங்குள்ள ஒரு உணவகத்தில் 'ஷவர்மா' சாப்பிட்டுள்ளனர்.
அதன்பிறகு அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதையடுத்து, ஷவர்மாவை விற்ற உணவகத்தில் சோதனை நடத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், அக்கடையை மூடி முத்திரை வைத்தனர்.
இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 60க்கும் மேற்பட்ட கடைகளில் நேற்று அதிரடிச் சோதனைகளை நடத்தினர்.
அப்போது, சென்னையில் உள்ள ஒரு சில கடைகளில் தரமற்ற வகையில் இருந்த உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
திருக்குவளையில் 60 கிலோ கெட்டுப்போன இறைச்சியையும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி, பூந்தமல்லி, செங்குன்றம் உள்ளிட்ட பல பகுதிகளில் சோதனை செய்து கிலோ கணக்கில் கெட்டுப்போன இறைச்சியையும் பறிமுதல் செய்தனர்.
இதுவரை 60 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 10 கடைகளில் இருந்து தரமற்ற 25 கிலோ கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. அதிகாரிகள் அந்தக் கடைகளுக்கு ஆயிரக்கணக்கில் அபராதமும் விதித்தனர்.
"வெயில் காலத்தில் இறைச்சிகெட்டுப் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். உணவகங்களில் இறைச்சிகளைக் கையாள்வதில் உள்ள குறைபாடுகளால்தான் பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர்," என உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

