சென்னை: நகை, பணத்துக்காக தொழிலதிபரும் அவரது மனைவியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பாக கார் ஓட்டுநரும் அவரது நண்பர் ஒருவரும் கொலை நடந்த சில மணி நேரங்களில் கைது செய்யப்பட்டனர்.
இருவரும் நேப்பாளத்துக்கு தப்பிச்செல்ல இருந்ததாகவும் கொள்ளை அடிக்கப்பட்ட ஆயிரம் பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.
சென்னை மைலாப்பூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரான 60 வயது ஸ்ரீகாந்த்தும் அவரது மனைவி அனுராதாவும் (55 வயது) கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவில் உள்ள தங்கள் மகள் சுனந்தாவின் வீட்டுக்குச் சென்றிருந்தனர்.
சுனந்தா அண்மையில்தான் ஒரு குழந்தைக்குத் தாயானார். மகளுடன் இரு மாதங்கள் செலவிட்ட பின்னர், நேற்று முன்தினம் இருவரும் சென்னை திரும்பினர்.
அதிகாலை 3.30 மணியளவில் சென்னை வந்தடைந்த அவர்களை கார் ஓட்டுநர் கிருஷ்ணா விமான நிலையத்தில் வரவேற்று மைலாப்பூரில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு ஏற்கெனவே காத்திருந்த தனது நண்பர் ரவியுடன் சேர்ந்து தொழிலதிபர் ஸ்ரீகாந்த்தையும் அவரது மனைவி அனுராதாவையும் துடிக்கத்துடிக்க அடித்துக் கொன்றுள்ளார் கிருஷ்ணா.
நேப்பாளத்தைச் சேர்ந்த கிருஷ்ணாவின் தந்தை ஸ்ரீகாந்த்துக்குச் சொந்தமாக இருந்த பண்ணை வீட்டில் நீண்ட காலம் பணியாற்றியவர். அதனால் கிருஷ்ணாவுக்கு சிறு வயது முதலே ஸ்ரீகாந்த் குடும்பத்தாரை நன்கு தெரியும்.
மைலாப்பூரில் இருந்த வீட்டில் கிருஷ்ணாவுக்கு என தனி அறையை ஒதுக்கித் தந்து அவரை அங்கேயே தங்க வைத்திருந்தார் ஸ்ரீகாந்த்.
இந்நிலையில், ஸ்ரீகாந்த் தம்பதியரைக் கொலை செய்த பின்னர், வீட்டில் இருந்த தங்க நகைகளை மூட்டை கட்டி எடுத்துக்கொண்ட கிருஷ்ணாவும் அவரது நண்பர் ரவியும் விடிவதற்குள் இருவரையும் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஸ்ரீகாந்த்தின் பண்ணை வீட்டில் புதைக்க முடிவு செய்தனர்.
அதன்படி, இருவரது உடல்களையும் எடுத்துச் சென்று ஒரு மணி நேரத்துக்குள் குழிதோண்டி புதைத்து, பின்னர் காரில் தப்பிச் சென்றனர்.
இதற்கிடையே, சென்னை சென்றடைந்த பின்னர் பெற்றோர் தம்மை தொடர்புகொள்ளாததால் சந்தேகமடைந்த ஸ்ரீகாந்த்தின் மகள் சுனந்தா, சென்னை காவல்துறையைத் தொடர்புகொண்டார்.
இதையடுத்து, மைலாப்பூரில் உள்ள அவர் வீட்டுக்கு காவல்துறையினர் சென்றனர். அங்கு வீடு முழுவதும் ரத்தக்கறை காணப்பட்டதால் ஏதோ அசம்பாவிதம் நடந்திருந்தது உறுதியானது என்று காவல்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"சனிக்கிழமை காலை ஸ்ரீகாந்த் தம்பதியர் கொல்லப்பட்டது குறித்து, மதியம் ஒரு மணி அளவில்தான் விவரம் தெரிந்தது.
"கிருஷ்ணாவும் டார்ஜிலிங்கைச் சேர்ந்த ரவியும் நேப்பாளத்துக்கு தப்பிச்செல்லத் திட்டமிட்டிருந்தனர். கொலை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட தனிப்படையினர், விரைந்து செயல்பட்டதை அடுத்து, ஸ்ரீகாந்த்தின் கைபேசி சிக்னலை வைத்து, அவர் ஆந்திர மாநிலம் ஓங்கோல் பகுதியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
"பின்னர், அங்கு காரில் சென்றுகொண்டிருந்த அவரை ஆந்திர காவல்துறை உதவியோடு கைது செய்தோம். இருவரிடம் இருந்து ஒன்பது கிலோ தங்கம், 70 கிலோ வெள்ளிப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
"கிருஷ்ணாவுக்கு 15 வயதில் ஒரு மகன் இருப்பதும் அவரை டார்ஜிலிங் பள்ளிக்கூடம் ஒன்றில் சேர்க்க முயன்றபோது ரவியுடன் பழக்கம் ஏற்பட்டதும் தெரிய வந்தது. காவல்துறை சில மணி நேரம் தாமதித்திருந்தால், இருவரும் நேப்பாளத்துக்கு தப்பிச் சென்றிருப்பர்," என்று காவல்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

