சிவகங்கை: தனக்கு குழந்தை பிறந்ததை அடுத்து, வெளிநாட்டில் இருந்து திரும்பிய ஆடவர், பச்சிளம் குழந்தையின் முகத்தைப் பார்க்கும் முன்பே அண்டை வீட்டுக்காரரை அடித்துக்கொன்ற சம்பவம் சிவகங்கையில் நிகழ்ந்துள்ளது.
அங்குள்ள அண்டக்குடி கிராமத்தில் வசித்து வருகிறார் நாகூர் பிச்சை. இவருக்குப் பக்கத்து வீட்டில் சித்திரைவேலு என்ற 65 வயது விவசாயி தன் மனைவி, மகனுடன் வசித்து வந்தார்.
இரு குடும்பங்களுக்கும் இடையே சில காரணங்களால் அடிக்கடி தகராறு மூண்டுள்ளது. இது குறித்து நாகூர் பிச்சை குவைத்தில் வேலை பார்த்து வந்த தனது மகனான 35 வயது செல்வத்திடம் அடிக்கடி விவரம் தெரிவித்துள்ளார்.
இதனால் சித்திரைவேலு குடும்பத்தார் மீது செல்வம் கடும் கோபத்தில் இருந்து வந்தார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை நாடு திரும்பினார் செல்வம்.
திருச்சி விமான நிலையம் வந்தடைந்த அவர், அங்கிருந்து தனது கிராமத்துக்கு வாடகைக் காரில் புறப்பட்டுச் சென்றார்.
கிராமத்தை அடைந்ததும், தன் வீட்டுக்கு முதலில் செல்லாமல், காரை விட்டு இறங்கிய கையோடு முதல் வேலையாக சித்திரைவேலு வீட்டுக்குள் நுழைந்துள்ளார் செல்வம்.
அங்கு அந்த முதியவரைக் கண்டதும் கீழே கிடந்த ஒரு கட்டையை எடுத்து கோபத்துடன் பாய்ந்தவர், சித்திரவேலுவை சரமாரியாகத் தாக்கினார்.
இதில் படுகாயம் அடைந்த சித்திரவேலுவை அவரது குடும்பத்தார் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததை அடுத்து செல்வம் கைதானார்.
தனக்குப் பிறந்துள்ள குழந்தையை முதன்முறையாகப் பார்க்கும் முன்பே அவர் கொலை வழக்கில் சிக்கியது அவரது குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

