தஞ்சை: முன்விரோதம் காரணமாக கணக்காய்வாளர் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் தஞ்சையில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மூன்று பேருக்கு வலைவீசப்பட்டுள்ளது.
45 வயதான கணக்காய்வாளர் பி.மகேஸ்வரன் தஞ்சையில் வசித்து வந்தார். தனது வீட்டுக்கு அருகே நூறு மீட்டர் தொலைவில், பண்ணை அமைத்து அதில் ஆடு, கோழி ஆகியவற்றை வளர்த்து வந்தவர், தென்னை மரங்களை வளர்ப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.
மகேஸ்வரன் தனது பண்ணைக்கு எதிரே இருந்த மாநகராட்சிக் கழிவறைக் கட்டடத்தையும் அண்மையில் ஏலத்துக்கு எடுத்திருந்தார். இது தொடர்பாக அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பண்ணை வீட்டில் மகேஸ்வரன் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத மூன்று பேர் வீட்டுக்குள் புகுந்தனர். அடுத்த ஓரிரு நிமிடங்களுக்குள் மூவரும் மகேஸ்வரனை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியதில், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து அங்கேயே உயிர் இழந்தார்.
இதையடுத்து, அம்மூவரும் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர். மகேஸ்வரனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில், மாநகராட்சிக் கழிவறைக் கட்டடத்தை ஏலத்தில் எடுப்பது தொடர்பான முன்விரோதமே படுகொலைக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

