புதுக்கோட்டை: தமிழக ஆளுநர் மாளிகையில் பத்து மசோதாக்கள் நிலுவையில் உள்ளதாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்என்ற மசோதாவை மத்திய அரசுக்கு ஆளுநர் அனுப்பி உள்ளதாக புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.
ஆளுநர் தனது பணியை முடித்துவிட்ட நிலையில், நீட் தேர்வு விவகாரத்தில் இனிமேல் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார் அமைச்சர்.
"எந்த மசோதாக்கள் மீதும் காலம் தாழ்த்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாங்கள் ஆளுநருடனோ, அதிபருடனோ மோதல் போக்கை கடைப்பிடிக்கவில்லை.
"மக்கள் நலன் கருதி அளிக்கும் மசோதாக்கள் தொடர்பில் வீண் தாமதம் ஏற்படக்கூடாது என்றுதான் சொல்கிறோம்.
"இணையம் வழி நடைபெறும் சூதாட்டத்தை ஒழிக்க கடந்த ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டம் செல்லாது என உயர் நீதிமன்றம் அறிவித்ததுடன், புதிய சட்டம் இயற்றலாம் எனவும் கூறியிருந்தது.
"எனினும், அரசு தலைமை வழக்கறிஞரின் ஆலோசனையின் பேரில் அந்த சட்டத்தில் திருத்தம் செய்து மேல்முறையீடு செய்துள்ளோம். இதற்கு உச்ச நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு வரும் என்று நம்புகிறோம்," என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே மறைமுக மோதல் நிலவி வருகிறது. அரசின் செயல்பாடுகளில் ஆளுநர் தலையிடக்கூடாது என ஆளும் தரப்பு கூறுகிறது.
இந்நிலையில், தமிழக அரசு ஒப்புதலுக்காக அளிக்கும் மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் ஆளுநர் தரப்பில் தேவையின்றித் தாமதம் ஏற்படுவதாகவும் ஆளும் திமுக குறைகூறியுள்ளது. ஆனால் ஆளுநர் தரப்பு இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
கச்சத்தீவு விவகாரம்
இதற்கிடையே கச்சத்தீவை மீட்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் வலியுறுத்தி உள்ளதாகவும் அதற்கு தேவையான எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

