ரூ.500 கோடி செலவில் உலகத்தரத்துக்கு மேம்படுத்தப்படுகிறது எழும்பூர் ரயில் நிலையம்

ரூ.500 கோடி செலவில் உலகத்தரத்துக்கு மேம்படுத்தப்படுகிறது எழும்பூர் ரயில் நிலையம்

1 mins read
0ba1a900-7fad-4abd-9796-219a16fd2251
எழும்பூர் ரயில் நிலையம். கோப்புப் படம்: ஊடகம் -

சென்னை: தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான, சென்னையில் உள்ள எழும்பூர் ரயில் நிலையம் ரூ.500 கோடி செலவில் உலகத்தரத்துக்கு மேம்படுத்தப்படுகிறது.

எழும்பூர் ரயில் நிலையத்தில் 11 நடைமேடைகள் உள்ளன. தினமும் அங்கிருந்து 28 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் நிலையம் வழியாக 23 ரயில்கள் செல்கின்றன. மேலும் புறநகர் மின்சார ரயில் நிலையம், அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையம் என எழும்பூர் பகுதிக்கு தினமும் 4.5 லட்சம் பயணிகள் வந்து போகின்றனர்.

கடந்த 1908ஆம் ஆண்டு திறக்கப்பட்டது முதல் எழும்பூர் ரயில் நிலையம் தேவைக்கு ஏற்ப அவ்வப்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரூ.500 கோடி செலவில் பயணிகளுக்கு தேவைப்படும் பல்வேறு அடிப்படை வசதிகளுடன் தரம் உயர்த்தப்படுகிறது. நடைமேடைகள், நடை மேம்பாலங்கள் மேம்படுத்தப்படும்.

மின் துாக்கி, நகரும் படிக்கட்டு வசதிகள் நிறுவப்படும் என்றும் அடுக்குமாடி வாகன நிறுத்தப் பகுதி அமைக்கப்படும் என்றும் தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

"ரயில் நிலைய கட்டடம் புதுப்பொலிவு பெறும். பிரபல கட்டட, தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு கலைநயத்துடன் கூடிய பிரம்மாண்ட கட்டடமாக மாற்றப்படுகிறது.

"வடிகால் வசதி, நுழைவாயிலில் அழகான வரவேற்பு வளையம் அமைப்பது எனப் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன," என ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.